வடமராட்சி, திக்கம் வடிசாலையை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் .கி.சந்திரசேகரன் தலைமையில் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற “திக்கம் வடிசாலையை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்காது கூட்டுவாளர்களே தொடர்ந்தும் நடத்துதல்” தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்படி முடிவை தெரிவித்தார்.
நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை, பனை அபிவிருத்தி சபை தலைவர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர், யாழ். மேலதிக மாவட்டச் செயலர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் மரபுசார்ந்த உற்பத்திக் கைத்தொழில் நிலையங்களில் ஒன்றான திக்கம் வடிசாலை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் காரணங்கள் காரணமாக செயற்படுத்தப்படாதுள்ளது.
இதனால் அங்கிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பனம் சாராயம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. அதற்கமைய அதனை மீள இயக்குவதற்கு, தனியார் ஒருவரிடம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தனியாருக்கு, ஒருபோதும் வடிசாலையை வழங்க முடியாது . வடக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உட்பட்ட பனை தென்னை வள உற்பத்தியாளர்கள், கூட்டுவாளர்களே தொடர்ந்தும் நடத்துதல் வேண்டும் என சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, திக்கம் வடிசாலையை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாற்று திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.