யாழ்ப்பாணத்தில் இருந்து , பருத்தித்துறை பகுதிக்கு வல்லை வெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணின் 5 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (16) ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், அவர்களின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் வல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த வயோதிப பெண்ணின் தாலிக்கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனால் வயோதிப பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தி உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை அப்பிரதேசம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் நடமாட்டம் பாதுகாப்பானதாக ஆக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.