தென் கடலில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஶ்ரீலங்கா கடற்படையினரின் சிறிய ரக படகொன்று 6 வீரர்களுடன் மாயமாகியுள்ள நிலையில், அதில் இருந்த குறித்த வீரர்களுக்கும் என்ன நடந்தது என இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த படகையும் அதில் இருந்த வீரர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்காக மீனவர்களின் உதவி மற்றும் விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி, தென் பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் இயங்கும் சிறிய ரக படகொன்றில் கடலுக்கு கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற 6 வீரர்களும் படகுமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
குறித்த படகுடனான அனைத்து தொடர்புகளும் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் இல்லாமல் போயுள்ளதுடன், அது முதல் இன்று வரை குறித்த படகு தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், கடற்படையினர் தேடி வருகின்றனர்.
சந்தேகத்துக்கு இடமான படகுகள் , போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான உளவுத் தகவல்களை சேகரிக்க தெற்கு கடற் பரப்பில் சிறிய ரக கடற்படை படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.