இலங்கை பாராளுமன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால பாடநெறியொன்றை ஆரம்பித்துள்ளன.
கடந்த 16ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றதுடன், ஆரம்ப உரையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க நிகழ்த்தியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறியின் வளவாளர்களாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் காணப்படுகின்றனர்.
இலங்கை பாராளுமன்றம் பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்து இவ்வாறான கல்விப் பாடநெறியொன்றை ஆரம்பித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்தப் பாடநெறியின் ஊடாக ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறைகள், பாராளுமன்ற அமைப்பின் பரிணாமம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை, நிலையியற் கட்டளைகள், பொதுமக்கள் சேவைச் செயற்பாட்டுக்கான தொடர்பு, பெண்கள் பிரதிநிதித்துவம் போன்ற விடயதானங்கள் குறித்து புரிதல்கள் இந்தப் பாடநெறியின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாடநெறியில் நான்கு விரிவுரைகள் மற்றும் பாராளுமன்ற சுற்றுப்பயணம் என்பன உள்ளடங்கியுள்ளன.
பாடறெியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைபீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லசந்த மானவடு, கொழும்புப் பலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி பிரதீப் பீரிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக, சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.