
70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து அண்மையில் காலமான இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் தாங்கிய பேழை பல நாள்கள் பிரித்தானியாவின் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்ரர் பிரதான மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை காலை அங்கிருந்து விமர்சையான அரசு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கின்றது.
இன்று (19) காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும்.
அதன் பின்னர் அங்கிருந்து விண்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே மிக கல்லறை ஜெபம் நடைபெறும். அதன் பிறகு நெருக்கமானவர்கள் முன்னிலையில் மகாராணியின் உடல் அடக்கம் நடைபெறும்.
இன்றைய இறுதி சடங்கில் பிரித்தானியாவின் றோயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் ராணியின் உடல் தாங்கிய பேழையை வைத்து றோயல் கடற்படையின் 142 மாலுமிகள் அதை இழுத்துச் செல்வார்கள்.
இறுதி ஊர்வலத்தில் பீரங்கி வண்டிக்குப் பின்னால் புதிய அரசர், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹேரி, அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் செல்வார்கள்.
ஸ்காட்டிஷ், ஐரிஷ் ரெஜிமெண்டுகளின் பைப் இசையும், டிரம் இசையும் சம்பிரதாயத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும். ராயல் விமானப்படை, கூர்க்கா படை ஆகியோரின் இசையும் இருக்கும்.
இந்தப் பாதையில் ராயல் கடற்படையினர், ராயல் மரைன் படையினர் அணிவகுப்பார்கள். நாடாளுமன்ற சதுக்கத்தில் கார்ட் ஆஃப் ஹானர் அணியினர் நிற்பார்கள்.
இந்த அணியில் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பார்கள். ராயல் மரைன்ஸ் இசைக்குழுவினரும் இருப்பார்கள்.
அரசர்கள், ராணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு இது. இதில் ‘லையிங் இன் ஸ்டேட்’ என்று அழைக்கப்படும் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்படுதல், ராணுவ அணிவகுப்பு போன்ற கராறான சம்பிரதாயங்கள் இருக்கும்.
இறுதிச் சடங்கு ஜெபக்கூட்டம் நடக்கும் அபே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம். இங்கே பிரிட்டிஷ் அரசர்களுக்கும், ராணிகளுக்கும் முடிசூட்டப்பட்டுள்ளது. 1953ல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவும் இங்கேதான் நடந்தது. 1947ம் ஆண்டு அப்போது இளவரசியாக இருந்த எலிசபெத் – இளவரசர் பிலிப் திருமணமும் இங்கேதான் நடந்தது.
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் ‘தி லாஸ்ட் போஸ்ட்’ இசைக்கப்படும். பிறகு இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்படும். ராணியின் பைப்பர் தேசிய கீதமும் லேமன்டும் இசைத்து நண்பகல் வாக்கில் இறுதிச் சடங்கை முடித்துவைப்பார்.