அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சேமிப்பதற்காக வழமையான சத்திரகிசிச்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
எஞ்சியிருக்கின்ற மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இருதய சத்திரகிசிச்சை போன்ற உயிர்காக்கும் சத்திரகிசிச்சைகளிற்காக பத்திரப்படுத்தவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்க மருந்து தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் அன்டிபயோட்டிக்ஸ்,கடுமையான சூழ்நிலைகளை கையாள்வதற்கான மருந்துகள் போன்றவை பற்றாக்குறையாக காணப்படுவதால் வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாதங்களிற்கு முன்னரே இந்த வழமையான சத்திரகிசிச்சைகளிற்கு மருத்துவர்கள் அனுமதிவழங்கிவிட்டனர். உரியநேரத்தில் சத்திரகிசிச்சை இடம்பெறும்என்ற நம்பிக்கையுடன் நோயாளிகள் உள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய மருந்து மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளிற்கு சத்திரகிசிச்சைகளை மேற்கொள்ளாமல் வைத்தியசாலைகள் திருப்பிஅனுப்பிவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் புற்றுநோய் மருந்துகளிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.