Home செய்திகள் இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: ரணில்

இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: ரணில்

46
0

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக  நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு  விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன்,  ஜனாதிபதி பாதுகாப்புக் கல்லூரியில் கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் சிறந்ததொரு பாதுகாப்பு முறைமை இல்லை என்றால் எமது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் உலக மற்றும் பூகோள அரசியலின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் அது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று  அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் குறித்த கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதுவாகும்.

தேசிய மட்டத் தேவைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் மூலோபாய சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவது இந்த தேசிய பாதுகாப்புக் கல்லூரியின்  நோக்கமாகும்.

2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக்  கல்லூரியின்      முதலாவது பட்டமளிப்பு விழா இதுவாகும்,  மேலும் இந்த நிறுவனத்தின் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 31 பேருக்கு ஜனாதிபதி அவர்கள் பட்டங்களை வழங்கிவைத்தார்.