
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் ஆகிய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.
கிராமங்களில் வாழும் 1000ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அமைதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான வீதியாக இது காணப்படுகின்றது.
துணுக்காய், அம்பலப்பெருமாள் சந்திவரைக்குமான வீதி கடந்த 30வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் எந்த வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் பாதை ஊடான போக்குவரத்து வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் காணப்படுவதாக கிரம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தின் பின்னரான குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட இப்பகுதிகளின் அடிப்படை வசதிகள் இன்று வரையும் பூர்த்தி செய்யப்படவில்லை.
எனவே தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் எந்த விமோசனமும் இல்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமது கிராமங்களில் அதாவது அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெறக்கூடிய மருத்துவமனைகள், மேலதிக கல்வி நிலையங்கள், உயர்தர வகுப்புக்கள் உள்ளிட்ட எந்த தேவைக்கும் 20கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிளிநொச்சிக்கு செல்லவேண்டும்.
எனவே, தமது கிராமங்களுக்கான பிரதான வீதிகளை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.