Home உலக செய்திகள் ராஜபக்சேக்களின் அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள சூழலில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய கோணத்தில் அணுகவேண்டும்:

ராஜபக்சேக்களின் அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள சூழலில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய கோணத்தில் அணுகவேண்டும்:

53
0

ராஜபக்ஷ அரசாங்கம் கலைக்கப்பட்டமையானது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் புதுப்பிக்கப்பட்டதொரு கோணத்தில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கின்றது.

எனவே தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கையுடன் பேணப்படும் அனைத்துவிதமான இராஜதந்திரத் தொடர்புகளின்போதும் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பன உறுதிப்படுத்தப்படுவதை அமெரிக்கா மையப்புள்ளியில் வைக்கவேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனிடம் கடிதம் மூலம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் 12 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான டெபோரா கே.ரோஸ், பில் ஜோன்ஸன், டெனி கே.டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் பி.மெக்கோவன் ஆகிய நால்வரும் அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி கே.பிளின்கெனுக்குக் கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: 

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்தும் அமைதியின்மை நிலவும் இத்தகைய சூழ்நிலையில் இலங்கையுடன் அமெரிக்கா பேணும் அனைத்துவிதமான தொடர்புகளிலும் மனித உரிமைகளை மையப்புள்ளியாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம். 

கடந்த சில மாதங்களாக இலங்கையில் எரிபொருள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் விளைவாக பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை மூடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த மேமாதம் இலங்கை அதன் வரலாற்றில் முதற்தடவையாகக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்களின் விளைவாக் கடந்த ஜுலை மாதம் நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, அதன் பின்னர் ஜனாதிபதிப்பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கையுடன் பேணப்படும் அனைத்துவிதமான இராஜதந்திரத்தொடர்புகளின்போதும் தமிழ் மக்களுக்குரிய மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றை அமெரிக்கா மையப்புள்ளியில் (பிரதான அடிப்படையாக்காரணியாக) வைக்கவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். 

கடந்த 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் இணையனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தைத் தயாரிப்பதிலும் அதனை நிறைவேற்றுவதிலும் அமெரிக்கா முக்கிய பங்குவகித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்து ‘உள்ளக ரீதியான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையைத் தயாரித்து நிறைவேற்றுவதாக’ மேற்படி தீர்மானத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியது. 

அதிலிருந்து சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நிலைமாறுகால நீதியை நோக்கிய வலுவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையொன்றை இலங்கை இன்னமும் முன்வைக்கவில்லை.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கு வழங்கிவரும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றின் முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். 

ராஜபக்ஷ அரசாங்கம் கலைக்கப்பட்டமையானது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் புதுப்பிக்கப்பட்டதொரு கோணத்தில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கின்றது.

எனவே இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கின்ற கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றுவதை அமெரிக்கா உறுதிப்படுத்தவேண்டியது அவசியாகும். 

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்னமும் முழுமைப்படுத்தப்படாமலிருக்கும் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தவேண்டும்.

மேலும் இலங்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை ஊக்குவிப்பதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்திடம் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐ.நா பாதுகாப்புச்சபையில் முன்வைக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.