Home உலக செய்திகள் ஜெனீவா செல்கிறது இலங்கை தொடர்பான புதிய குற்றச்சாட்டு அறிக்கை!

ஜெனீவா செல்கிறது இலங்கை தொடர்பான புதிய குற்றச்சாட்டு அறிக்கை!

58
0

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில், புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், பொதுவாக மனித உரிமை மீறல்கள், மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெறுவது வழமை.

ஆனால், இந்த முறை பொருளாதாரக் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் நடந்த பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல், தண்டனை விலக்கு உட்பட பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது இன்றியமையாதது என்றும், நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஊழல், மோசடி, தவறான தீர்மானங்கள், மோசமான நிர்வாகம் போன்ற காரணங்கள் நாட்டை படு பாதாளத்தில் விழுத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

இதனை மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே கூறியிருக்கிறார். அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் தானும் ஒருவர் என்பதை, அவர் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

அதுபோல ஆட்சியில் இருந்த தலைவர்கள், முடிவுகளை எடுத்த அரசியல்வாதிகள், அதற்குத் துணைபோன அதிகாரிகள் அனைவரும், இந்தப் பேரழிவுக்குப் பொறுப்பானவர்கள்.

தொடர் சங்கிலி போல பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது. இன்றைக்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறுகின்ற மஹிந்த ராஜபக்ஷ, நாளை விசாரணை, தண்டனை என்று வரும் போது அதனை ஏற்றுக் கொள்வாரா என்று தெரியாது.

அதுபோல, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் கோருகின்றபடி, வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தல் என்பது, தற்போதைக்கு நடக்க கூடிய காரியமாகத் தெரியவில்லை.

ஆனால், பொருளாதாரக் குற்றங்கள் அல்லது மோசடிகள், ஊழல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும் பொறிமுறை என்பது, எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலானதொரு அழுத்தமாகத் தான் இருக்கப் போகிறது.

பொருளாதார குற்றங்கள் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஏன் தலையிடுகிறது, மனித உரிமைகளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி இயல்பானதொன்று மாத்திரமல்ல. அது மனித தவறுகளால், திட்டமிட்ட குற்றங்களால் தான் இடம்பெற்றது.

கொள்ளை நோயும், சுற்றுலாப் பயணிகள் வருகை தடைப்பட்டுப் போனதும், கடைசி நேரக் காரணிகளே தவிர, முதல்நிலைக் காரணிகளல்ல.

அதற்கு முன்னரே, இன ஒடுக்குமுறை, போர், போருக்காக மிகையாக கொட்டப்பட்ட வளங்கள், அதற்கான பெறப்பட்ட கடன்கள், அந்தக் கொள்வனவுகளிலும், பின்னைய காலகட்டத்திலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், தவறான கொள்கை நடைமுறைப்படுத்தல்கள், என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போக கூடிய மனித தவறுகள் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன.

அவற்றைச் சரிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்காததால் தான், இலங்கைத் தீவு பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு அலைகின்ற நிலை ஏற்பட்டது.

மக்கள் அரிசிக்கும், எரிவாயுவுக்கும், எண்ணெய்க்கும், நாட்கணக்காக வீதிகளில் படுத்துறங்கும் அவலத்தைக் கொண்டு வந்தது.

இந்த நிலையினால் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது, அதனை அடக்க அரசாங்கம் பலத்தைப் பிரயோகித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, அரச பயங்கரவாதம் ஏவிவிடப்படும் நிலை உருவானது.

இது மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதுடன், அவர்களின் பல்வேறு உரிமைகளையும் இல்லாமல் செய்தது.

சில நாட்களுக்கு முன்னர் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்களில் ஐந்தில் நான்கு பேர் தங்களின் உணவைச் சுருக்கிக் கொண்டுள்ளனர். இதனால் போசாக்கின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி, டொலர் பிரச்சினையைக் காரணம் காட்டி பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள், அல்லது கட்டுப்பாடுகள், மக்களில் பலரின் அன்றாட வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள், நுகர்வுகளைப் பாதித்திருக்கிறது.

தாங்கள் விரும்பிய உணவை உண்ணும் உரிமை கூட இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.

அரச நிர்வாகத்தில் இருந்தவர்களின் பொறுப்பீனங்கள் மற்றும் அவர்கள் இழைத்த பொருளாதாரக் குற்றங்களால், ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தங்களின் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.

அதனால் தான், பொருளாதாரக் குற்றங்களை இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்கிறது ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் மட்டுமல்ல. சர்வதேச நாணய நிதியமும் பொருளாதார குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கும், சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலை காணப்படுகிறது.

அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்ட பணியாளர் மட்ட உடன்பாட்டில், பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்திய, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வது என்பன முக்கியமான நிபந்தனைகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உடன்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

ஆனால் அந்த உடன்பாடு இன்னமும் அமைச்சரவையில் கூட முன்வைக்கப்படவில்லை என்பதை அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் உறுதிப்படுத்தியிருக்கிறார். எவ்வாறாயினும் அந்த உடன்பாட்டின் உள்ளடக்கத்தை அரசாங்கம் முழுமையாக வெளியிடுமா என்பது சந்தேகம் தான்.

இந்த நிலையில் பொருளாதார பேரழிவுகள் ஏற்படக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனை முன்னிறுத்தியே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க இணங்கியிருந்தால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அது ஒரு அமிலச் சோதனையாகவே இருக்கும்.

ஏற்கனவே பொருளாதார அழிவுகளுக்கு காரணமானவர்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

பஷில் ராஜபக்ஷவுக்கு மட்டும் நீதிமன்றம் வெளிநாடு சென்று  திரும்ப அனுமதி அளித்துள்ளது. ராஜபக்ஷவினரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்ற விசாரணையை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், ராஜபக்ஷவினர் ஆட்டுவிக்கின்ற பொம்மையாகத் தான் ரணில் இருக்கிறாரே தவிர, சுயமாக செயற்படக் கூடிய பலம் அவருக்கு பாராளுமன்றத்திலும் கிடையாது, வெளியிலும் கிடையாது.

எனவே, பொருளாதார பேரழிவுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க முற்படும் போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆட்டத்தை அவர்கள் நிறுத்தி விடுவார்கள்.

அதேவேளை நடவடிக்கை எடுக்கும் வரை ரணிலுக்கு சர்வதேச நாணய நிதியமும், பிற அமைப்புகளும் தொடர்ந்து குடைச்சலைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு நெருக்கடியை சமாளித்து விட்டாலும் இனிமேல் தான் அவருக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து உண்மையான நெருக்கடிகள் உருவாகும். அதிலிருந்த அவரால் இலகுவாக தப்பித்துக் கொள்ளவும் முடியாது. தப்பியோடவும் முடியாது.