Home தாயக செய்திகள் மக்கள் குடியிருக்க காணி இல்லை, இராணுவத்தினருக்கு 1840 ஏக்கரா..?

மக்கள் குடியிருக்க காணி இல்லை, இராணுவத்தினருக்கு 1840 ஏக்கரா..?

47
0

யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில் பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லை. கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லை .தெருக்களில்  இருக்கின்றார்கள்,உறவினர், நண்பர்களின்  காணிகளில் இருக்கின்றார்கள்.

என்னுடைய காரியாலயத்துக்கு தினசரி குறைந்தது 10 பேர் காணி கேட்டு வருகின்றார்கள். இவ்விடயம் தொடர்பாக  வடக்கு மாகாண  ஆளுநருக்கு 4 தடவைகள் கடிதம்  எழுதினேன்.

பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியில் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் வழங்குங்கள்.

அவர்கள் தொழில் செய்து அந்த இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவை குடிநீர் உள்ள இடம்,தோட்டம் செய்யக்கூடிய நிலம் . எனவே காணி இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் எனக்கூறினேன்.

மறுபுறம்  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதினேன். பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் ஒரு துண்டு காணி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பளையில் உள்ள 1840 ஏக்கர் காணியை   காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணி  என்ற அடிப்படையில் இராணுவத்திற்கு கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கான முழு முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவம் தோட்டம் செய்வதற்கு கொடுக்கின்றார்கள். பலாலியில் தனியாரின் 3500 ஏக்கர் காணியில் இராணுவம் தோட்டம் செய்கின்றது.

வட்டக்கச்சியில் அரச காணியில் இராணுவம் தோட்டம் செய்கின்றது. இராணுவத்துக்கு காணி கொடுத்தால் இலங்கையின் போஷாக்கு மட்டம் எழும்பி விடுமா?கொஞ்சமாவது மூளையை  பயன்படுத்துங்கள்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலை மிக மோசமாகவுள்ளன..கிளிநொச்சியிலுள்ள வலைப்பாடு என்ற கிராமத்தில் கடல்தொழில்தான்  பிரதானமான  தொழில்.

அந்த தொழிலுக்கு சென்ற இராசரத்தினம் நிமால் என்ற 44 வயதுடைய 3 பிள்ளைகளின்  தந்தை கடந்த 4 ஆம் திகதி வலைப்பாட்டை சேர்ந்த கடற்படையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு  சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்படடார்.

கடற்படை இவரை தாக்கியதற்கான காரணமென்ன? ஆயுதம் வைத்திருந்தாரா?குண்டுகள் வைத்திருந்தாரா?நாட்டுக்கு எதிராக செயற்பட்டாரா?கடற்படையினருக்கு வெறிவந்தால். அவர்கள் மதுபோதையில் நின்றால் அவர்களின் ”பைட்ஸ்”ஆக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள்.மிக மோசமாக தாக்கப்படுகின்றார்கள்.இது மிக மோசமான நிலைமை. இதனை  புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.