விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக குற்றம் சுமத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
பூநகரி முக்கொம்பன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட் உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ், மகேந்திரன் பார்த்தீபன் மற்றும் வடமராட்சி தாளைடியை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட 12 பேரே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (07) யாழ் ஊடக அமையத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நடாத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.