
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ்.மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கனடா – மார்க்ஹம் மாநகர மேயர் Frank Scarpitti ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, யாழ். மாநகர மேயர் மணிவண்ணன், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். அவர்களின் அந்த நீண்ட கால கோரிக்கைக்கு மதிப்பளித்து கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் அமைந்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றார்.
அத்துடன், தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர்போராட்டங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ்மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச்செய்துள்ளமை தொடர்பிலும், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதா பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.