Home தாயக செய்திகள் நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கர

நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கர

44
0

சிறந்த அரசியல் மாற்றத்திற்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதம்,ஒத்துழைப்பு அவசியம்.சவால்களை வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்ல நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலவை இலங்கை கூட்டணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கர தெரிவித்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை  இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடி,பணவீக்கம் ஆகியவற்றின் வரைவிலக்கணத்தை துறைசார் நிபுணர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆனால் தற்போது சாதாரண மக்களும் பொருளாதார நெருக்கடி,பணவீக்கம் ஆகியவற்றின் வரைவிலக்கணத்தை அனுபவ ரீதியில் விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில்  நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது அதன் தாக்கம் நடுத்தர மக்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.வரி செலுத்தலில் நடுத்தர மக்கள் மீது செலுத்தப்படும் அவதானம் முதலாளித்துவ வர்க்கத்தின் மீது செலுத்தப்படுவதில்லை.நாட்டு மக்கள் சமமான முறையில் மதிக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தியின் இயந்திரமாக கருதப்படும் முதலாளித்துவ வர்க்கத்தின் மீது அரசாங்கம் வரியை அதிகரிக்கவில்லை.பொருளாதார நெருக்கடியினை நடுத்தர மக்கள் மாத்திரம் சுமக்க வேண்டியது நியாயமற்றதாகும்.நடுத்தர மக்கள் அதிகமாக உழைக்க வேண்டும்  ஆனால் குறைந்தளவில் உண்ண வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் முதலாளித்துவ வர்க்கத்தை பாதுகாத்துள்ளதால் நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு தீவிரமடைந்தது.மக்களின் ஆசிர்வாதம்,மற்றும் ஆதரவு எமக்கு அவசியமாகும்.சகல சவால்களையும் வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்வோம் என்றார்.