ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன் பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் , இம்முறை மேலும் பல யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளன.
குறிப்பாக அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்பானதாகவே அந்த யோசனைகள் அமையும். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகும்.
எனவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் மனித உரிமைகளையும் , ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். ஆனால் ஒருபோதும் அதனை நிறைவேற்றியதில்லை. எனவும் சுட்டிக்காட்டினார்.