2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியாகியுள்ளன. அதற்கமைய மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவாரகேஷ் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்திலும் , அகில இலங்கை ரீதியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் 2.98 Z புள்ளிகளையும் பெற்றுள்ளதோடு, உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் , மற்றும் பொது ஆங்கிலத்திலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.
அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவனான இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் கொவிட் தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு பெப்ரவரி 7 ஆம் திகதியே நடத்தப்பட்டன. அதற்கமைய பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை இடம்பெற்ற இப்பரீட்சைக்கு , 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 35 பேர் பாடசாலை மூலமும் , 36 ஆயிரத்து 647 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்குத் தோற்றினர்.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 491 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இணைய முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.