Home செய்திகள் பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் மக்கள் போராட்டம் தோற்றம் பெறும்:

பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் மக்கள் போராட்டம் தோற்றம் பெறும்:

49
0

மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் இல்லாவிடின் மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தோற்றம் பெறும், அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தினால் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து,சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமனவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்கிறார்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்nடுக்கப்பட்டாலும், தற்போது சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் உண்மை நோக்கம் டீல் அரசியலாக்கப்பட்டு விட்டது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் கூட அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்துகிறார்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளுடன் வரையறுக்கப்பட்ட அமைச்சரவையினை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் மக்கள் போராட்டம் மீண்டும் வெகுவிரைவில் தோற்றம் பெறும்,அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பை முழுமையாக வெறுக்கிறார்கள்.

அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிடின்,தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஜனாதிபதி வசமாகும். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என்றார்.