
பொதுநலவாய அமைப்பின் 65வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
கனடாவில் – பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 500 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நான் பங்கேற்றுருந்தேன்.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.
குறிப்பாக தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் எல்.ஏ அப்பாவு ஐ சந்தித்து எமது மக்களின் பல விடயங்கள் சம்பந்தமாக பேசியிருந்ததோடு, தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் மற்றும் இலங்கைக்கு தமிழக அரசாங்கம் வழங்கி வரும் உதவித்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டொக்டர் ஜி. குணராஜ் இணையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன். மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. என்றார்