இலங்கை சுதந்திரத்தின் பின்னர் எதிர்கொண்டுள்ள மோசமான நிதி நெருக்கடியிலிருந்து அந்த நாட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் ஜப்பான் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஏற்பாடு செய்ய ஜப்பான் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய நாடான சீனா இந்த மாநாட்டில் இணைந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை.
இலங்கையின் 6.2மில்லியன் டொலர் கடன் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு சீனா உதவும் என்றால் இந்த வருட இறுதிக்குள் சீனாவுடன் இணைந்து இலங்கை குறித்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு ஜப்பான் தயாராகிவருவதாக ஆங்கில ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கும் முக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ஜப்பானை கேட்டுக்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் ஜப்பான் பிரதமருடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.