Home முக்கிய செய்திகள் மோசடியினை பின்புலமாக கொண்டுள்ள தரப்பினரை ஒன்றிணைத்துக் கொண்டால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது!

மோசடியினை பின்புலமாக கொண்டுள்ள தரப்பினரை ஒன்றிணைத்துக் கொண்டால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது!

60
0

மோசடியினை பின்புலமாக கொண்டுள்ள தரப்பினரை ஒன்றிணைத்துக் கொண்டால் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அமைச்சரவையினை வெகுவிரைவில் ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை அறிய முடிகிறது.

இலஞ்ச ஊழல் மோசடி,நீதிமன்றினால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினருக்கு புதிய அமைச்சரவையில் எவ்வித அமைச்சுக்களையும் வழங்க வேண்டாம் என்பதை ஜனாதிபதியிடம் பொறுப்புடன் வலியுறுத்தியுள்ளோம்.

ஊழல் மோசடியினை பின்புலமாக கொண்டுள்ள தரப்பினரை இணைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

புதிய அமைச்சரவையில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள தரப்பினரை ஜனாதிபதி இணைத்துக்கொள்ளமாட்டார் என்பதை தனிப்பட்ட முறையில் எதிர்பார்க்கிறேன்.

சர்வக்கட்சி அரசாங்கம்,தேசிய அரசாங்கம் மற்றும் பல அரசியல் கட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றன. 

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். நாட்டு மக்கள் மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30ஆகவும், இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையை 40ஆகவும் அதிகரிப்பதை முழுமையாக வெறுக்கிறோம்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் அமைச்சுக்களை அதிகரிப்பது அரசியல் கட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை மேலும் தீவிரப்படுத்தும்.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். 

சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சுக்கள் 18 ஆக வரையறுக்கப்பட்டு, இராஜாங்க அமைச்சுக்களின் நியமனம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.