நாட்டில் பரவலாக அதிகரித்துள்ள பாலியல் துஸ்பிரயோகங்களால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்தையும், கல்வியையும் கற்பிக்கும் பணியில் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதானது “வேலியே பயிரை மேயும் செயல்” என மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
அண்மையிலும் முல்லைத்தீவில் ஒரு அதிபரும், சில மாணவர்களும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (24) தினம் இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து வந்து ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுக்கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து 1929 எனும் எண்ணுக்கு கூடிய விரைவில் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.