5 வருடங்களுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அவரே இப்போது ஜனாதிபதியாக இருக்கும் இந்த நேரமே சரியானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2017 இல், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரஸ்ஸல்ஸுக்குச் சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார், மேலும் அந்த வாக்குறுதியின் பேரில் இலங்கைக்கு ஜிபிஎஸ் பிளஸ் (GPS+) மீண்டும் நிறுவப்பட்டது,”
ஆனால், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணான சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதுவே நாடு ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கக் காரணம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐ.நா உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு இலங்கையால் உறுதியளிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் இன்னும் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதும், அதனூடான கைதுகளும், அடக்குமுறைகளும் தொடர்வதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்த மாதம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஶ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத அதடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை செய்துள்ளதோடு இவ்வாரத்தில் மட்டும் மூன்று நபர்களுக்கான தடுப்புக்காவலுக்கும் பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கையொப்பமிட்டுள்ளனர்.
இதன் மூலம் பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் இப்போது உண்மையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்பட இல்லை என்பதையும், அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் எடுத்துக் காட்டுவதாக எம்.ஏ.சுமந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.