முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை முகாமுக்காக மக்களின் காணிகளை அளவிடும் பணிகள் பொது மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டு நில அளவீட்டுக்காக சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.
இதேவேளை, அவ்விடத்திற்கு கலகம் அடக்கும் காவல்துறையினர் பிரசன்னமாக்கிருந்ததோடு அதிகளவிலான புலனாய்வாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர்.
அந்த காணிகளை கடந்த சில வருடங்களாக படை முகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடுசெய்ய எடுத்த முயற்சிகள் மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
அத்துடன் காணி எடுத்தற் சட்டம் 05 ஆம் பிரிவின் (1) ஆம் சரத்திற்கு அமைய காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.
காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் 15 காணி உரிமையாளர்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொண்டு காணிகளை கடற்படைக்கு வழங்க இணக்கம் தெரிவித்து அளவீடுக்கு சென்றிருந்தனர்.
எனினும் ஒரு தொகுதி மக்கள் தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் ஆகியோர் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களை அழைத்து பொதுவான ஒரு கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமும் காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இதன் பின்னணியில் அளவீட்டு பணிகளை நிறுத்தி நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்விடத்திற்கு கலகம் அடக்கும் காவல்துறையினர் பிரசன்னமாக்கிருந்ததோடு அதிகளவிலான புலனாய்வாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.