
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை நடத்துங்கள் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போது அந்நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் கட்சி பேதங்களை துறந்து பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டு,நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள்.
தாய்லாந்து,தென்கொரியா ஆகிய நாடுகள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போது அந்நாட்டு மக்கள் தமது சொத்துக்களையும், தங்கத்தையும் அரசாங்கத்திற்கு வழங்கி பொருளாதார நெருக்கடியினை வெற்றிக்கொண்டார்கள்.அந்த நாட்டு அரசாங்கங்கள் அந்நாட்டு மக்களை ஒருபோதும் நெருக்கடிக்குள்ளாக்கவில்லை.
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தால் இருபுறமும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் மாற்றி மாற்றி குறிப்பிட்டுக்கொண்டு சேறு பூசிக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகள் முதலில் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொள்கிறார்கள்.
யார் ஜனாதிபதி,யார் பிரதமர்,யாருக்கு எந்த அமைச்சு என்பதற்கு மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது. அரசியல் செய்வதற்கு சிறந்த சூழல் காணப்பட வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் கவனத்திற் கொள்ளவில்லை.
மிக மோசமான நிலையினை அடைந்துள்ள போதும் அரசியல்வாதிகள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவது.தற்போதைய நிலையில் பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்யப்பளிக்க வேண்டும்;.சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாயின் பொதுத்தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்றார்.