
எமது மீன்பிடித் தொழிலுக்குரிய மண்ணெண்ணெய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இதற்கு உடன் தீர்வு வழங்கவேண்டும். இவ்வாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமது மீன்பிடிப் படகுகளை உழவியந்திரங்களில் ஏற்றிவந்து கவனவீர்ப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்டம்வரை சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
அங்கு மீனவர்கள் தமது 5 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதி, பிரமதர், கடற்றொழில் அமைச்சர், எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனிடம் கையளித்தனர்.
மானிய விலையில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், படகு வெளியிணைப்பு இயந்திரத்துக்கான எரிபொருள், தடையின்றி மீனவர்களுக்கான எரிபொருள் விநியோகம், இந்திய இழுவைப்படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் தொழிலின்றி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக மண்ணெண்ணெய் வராத காரணத்தால்எமது தொழில் நிர்க்கதியாகியுள்ளது.
எமது பிள்ளைகளின் கல்வி, உணவு, ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கும் வருமானமின்றி துன்பப்படுகின்றோம்.எமது இந்த நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த ஐந்து கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.