இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
“இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. உலகின் எல்லா பகுதிகளிலும் ஆருடம் அனைத்தையும் தகர்த்து இந்திய தேசியக்கொடி பறக்கிறது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது” அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும். என சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த அம்பேத்கர், மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுலா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ஜான்சி ராணி லஷ்மிபாய், ஜல்கரி பாய், சென்னம்மா, மேகம் அஸ்ரத் மஹால் ஆகியோரை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி “டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், எஸ்.பி.முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீனதயாள் உபாத்யாயா, ஜே.பி.நாராயண், ஆர்.எம்.லோஹியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளின் முன் நாம் தலைவணங்கும் தினம் இது” என தெரிவித்தார்.
“சுதந்திர போராட்டம் குறித்து நாம் பேசும்போது, பழங்குடி சமூகம் குறித்து நாம் மறக்கக்கூடாது. பகவான் பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜூ, கோவிந்த் குரு என சுதந்திர போராட்டத்தின் குரலாக மாறிய எண்ணற்றோர் உள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்” என பிரதமர் தெரிவித்தார்.
சுதந்திரம் பெற்ற இந்த 75 ஆண்டுகளில் மக்கள் பல இன்னல்களை சகித்துக்கொண்டனர். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு.” என்றும் அவர் கூறினார்.
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ட்விட்டரில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.