இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று பெருந்திரளான பக்தர்களோடு சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
இன்று (14) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகிய தேர் உற்சவத்தின் போது அங்கப்பிரதிஸ்டை, கற்பூரச்சட்டி, பால்செம்பு, காவடி என பெருந்திரளான பக்தர்கள் தேரின் முன்னும் பின்னுமாக அணிவகுத்து செல்வதை காணமுடிகிறது.
இங்கிலாந்தின் கோடை விடுமுறைகாலத்தில் இடம்பெறும் இவ் ஆலய திருவிழாவில் இங்கிலாந்து மட்டுமன்றி சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்வதும், நேர்த்திக்கடன்கள் செய்வதும், நன்கொடைகள் வழங்குவதும் வழக்கம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களோடு சிறப்பாக இடம்பெற்ற இன்றைய தேர் திருவிழாவில் மதியம் 12:00 மணியளவில் இருப்பிடத்திற்கு வந்த தேரில் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆலயத்தினுள் காவடிகள், பால்செப்பு மற்றும் கற்பூரச்சட்டி நேர்த்தியாளர்கள் சென்று தமது நேர்த்திக்கடன்களை முடித்துவருகின்றனர்.
வழக்கம் போன்று இம்முறையும் இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில வர்த்தக நிலையங்களினால் பக்தர்களுக்கான தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு சக்கரை தண்ணீர், மோர், தண்ணீர் உள்ளிட்ட பானங்களை வழங்கிவருகின்றமையை காண முடிந்தது.
