தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அப்போதைய இலங்கை பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் எதிர் நோக்கும் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என தற்போது தனது கொள்கைபிரகடன உரையில் கூறியிருப்பது உண்மையாக இருந்தால் இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் அந்த ஒப்பந்தத்தை உடன் செயற்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியமானது என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்ட கால பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவர்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மை ஆசனங்களை பெற்றது. இதன்படி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதியாக சந்திரிக்கா குமாரதுங்க பதவி வகித்தார். இந்தக் காலப்பகுதியில் பிரதமர், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்திருந்தார். அதன் பின்னர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன்போது ஒஸ்லோ தொடர்பாடலின் போது சமஷ்டி முறை நடவடிக்கைகள் தொடர்பில் கூறப்பட்டது. அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் செயற்பாட்டில் அந்த நடவடிக்கை வரவில்லை. அந்த நேரத்தில் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் அனுமதிக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இப்போது அவர் ஜனாதிபதி பதவியில் இருக்கின்றார். இவருடன் இணைந்து பணியாற்ற அனைவரும் ஆயத்தமாக இருக்கின்றனர். இந்த சபையின் ஒத்துழைப்புடன் அவர் இயங்குவார். ஒஸ்லோ தொடர்பாடல் தொடர்பான ஒப்பந்தத்தை இப்போது அவருக்கு செயற்படுத்த முடியும். சபையின் அனுமதியுடன் அதனை அவர் செய்ய முடியும்.
எனவே சமஷ்டி என்பது தனிநாடு அல்ல. அது சிறந்தவொரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை முறையாக இதன்மூலம் பேண முடியும். நீங்கள் உண்மையாக செயற்பட்டால் 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட விடயத்தை இப்போது செயற்படுத்த முடியும் என்று கூறுகின்றோம்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு ஜனாதிபதியானார் என்பது பற்றி சற்று சிந்திக்க வேண்டும். போராட்டம் பயங்கரவாதமாக மாறியமை தொடர்பிலும் அவர் சிந்திக்க வேண்டும். மக்களின் போராட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முழு நாடும் மாற்றமொன்றை எதிர்பார்த்தே போராட்டத்தை முன்னெடுத்தது. இதன்படி அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பார்ப்பை அரசாங்கம் மாற்றி வருகின்றது. இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாக மாற்றப்படுவர் என்றார்.