வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னர் அரச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சொத்துக்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் முகாம்கள் அனைத்தையும் அகற்றுமாறு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காலி முகத்திடலையும் அதனை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அனைவரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக வெளியேற வேண்டும் என நேற்றையதினம் புதன்கிழமை (3) இலங்கை காவல்துறையிநரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலிமுகத்திடலில் உள்ள பயிர்ச்செய்கைகளை அகற்றுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவுறுத்தல்களுக்கு இணங்காதவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இம்மாதம் 9ம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்பாடுகளை செய்து மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளை படையினரின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தடைகளை போடும் முகமாக இவ் அறிவித்தல் வெளியாகியுள்ளது.