ராஜபக்ஸ நிழல் அரசாங்கம் தற்போது அரச வன்முறையை பயன்படுத்தி மக்களை அச்சமூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான தேசிய மக்கள் பேரவையுடன் இணைந்ததான சட்டத்தரணிகளுடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…
ஜனநாயகத்தை சிதைக்கும் புதிய வடிவத்தை சமூகத்தில் உருவாக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்காக முன்நிற்போருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் வலுவாக முன் நிற்க வேண்டும்.
அடக்குமுறை மூலம், மக்களுக்கு அரசாங்கம் சொல்லும் செய்தி, “போராட்டம் மேற்கொள்ளாது அதிலிருந்து கவனமாக இருங்கள் என்பதா…?
”மக்களை எதிர்ப்பதன் மூலம் போராட்டங்களை நிறுத்துங்கள் என்பதே அரசின் செய்தியா…?
கருத்தொன்றைக் கொண்டிருப்பதும், கருத்தொன்றை வெளிப்படுத்துவதுமான ஜனநாயக ரீதியிலான பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அரசாங்கம் வழங்க முயல்கிறதா..? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான நிலையில் சட்டத்தரணிகளுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் குடிமக்களின் வாழ்வுரிமைக்காக அவர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.