சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டு வரும் என நாங்கள் நினைக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எமது ஈழப் பிரச்சனையில் எமக்காக பல பேர் தங்களை எரித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எமது தமிழ் தரப்பு எதிர்க்கும்.
இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை. எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.
சீனாவின் உளவு பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருகை என்பதை இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளார்கள். தற்போது இந்திய மீனவர்களின் வருகை என்பது கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது.
அதை விட தமிழ்நாடு இன்றைக்கும் எங்களோடு இருந்து கொண்டிருக்கிறது.
எமது ஈழப் பிரச்சனையில் எமக்காக பல பேர் தங்களை எரித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எமது தமிழ் தரப்பு எதிர்க்கும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மையில் சீனாவினுடைய தூதுவர் இங்கு வந்து ஒரு சர்ச்சையை கிளப்பி சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.
ஆகவே இலங்கை அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவை பகைக்க கூடாது என்பது எனது கருத்து.
ஏனெனில் இந்தியா தான் பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கையை அண்மைக்காலமாக கை கொடுத்து தூக்கி வருகிறது.
எமது தமிழர்களை பொருத்தமட்டில் இந்தியா தான் எமக்கான தீர்வை பெற்று தரக்கூடியதும் எங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. இந்த விடயத்தில் சீனாவின் வேவு பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். என்றார்.