இலங்கையில் அண்மைய நாட்களாக கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன என கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர், இவை போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் முன்னரங்குகளில் இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, நிலாஷினி, சந்தியா எக்னெலிகொட மற்றும் ஷ்ரீன் ஸரூர் ஆகியோர் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு எதிரான் ஜனனாயக வழிப் போராட்டங்களின் முன்னரங்கில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ல நிலையில் பலர் தேடப்பட்டும் வருகின்றனர். எனவே தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து ஜனநாயக வழியில் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் கலந்து கொள்ளும் மக்கள் மீது அச்சுறுத்தலை மேற்கொள்ளும் அடக்குமுறைகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.