குறுகியகால சர்வகட்சி அரசாங்கத்தில் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மையின தலைவர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…
ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இன்று ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க அதே ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் இறங்கி உழவியல் யுத்தம் ஒன்றினை நடாத்தி வருகிறார்.
அண்மையில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்று கொண்டிருக்கின்ற கொலைகள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இக் கொலைகளின் பின்னணி என்ன?
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்ட மக்கள் ஆணை இன்று முற்றிலுமாக மாறியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கான மக்கள் ஆதரவு வெறும் 5% ற்கும் குறைவாகவே உள்ளது.
மக்களின் கனவுகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டை ஏமாற்றும் சர்வகட்சி அரசாங்கத்தில் நாம் ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை. எனவே நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு எம்மோடு (ஐக்கிய மக்கள் சக்தி) இணையுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லக்கூடியவாறு குறுகிய காலத்திற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக கூறினால் அது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும். அவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினத்தவர் ஒருவரை பிரதமராக நியமித்து ஒரு முன்னுதாரணமாக செயற்பட முடியும். அதை விடுத்து காலவரையறையற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் எம்மால் இணைய முடியாது. என்றார்.
ரணிலின் சர்வகட்சி ஆட்சிக்கு தமிழ், முஸ்லீம் தரப்புக்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இக் கருத்து வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.