கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அல்லது அச்சுறுத்தும் ரணிலின் வேட்டை நாளாந்தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கமைய காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் நுவரெலியா – பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததை அடுத்து ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.