Home தாயக செய்திகள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணிலை விடுவிக்க மைத்திரி அணி எதிர்ப்பு:

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணிலை விடுவிக்க மைத்திரி அணி எதிர்ப்பு:

62
0

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பூடாக அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ள விடுபாட்டுரிமையை பயன்படுத்தி பிரதிவாதி பட்டியலிலிருந்து நீக்க முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இந்த ஆட்சேபனையை முன் வைத்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பிரதமரும் இந் நாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவினால் அடிப்படை ஆட்சேபனை ஒன்று முன் வைக்கப்பட்டது.

தனது சேவை பெறுநர் தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரை பிரகாரம் அவருக்கு எதிராக எந்த வழக்கினையும் முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் , அது அவருக்கு அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள விடுபாட்டுரிமை எனவும் சட்டத்தரணி சுரேஷ் பெர்ணான்டோவினால் குறிப்பிடப்பட்டது.

இதற்கு மற்றொரு பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்ட பலர் தரப்பினர் கடும் ஆட்சேபனைகளை முன் வைத்தனர்.

இந் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் முன் வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனத்தை மையப்படுத்திய ஏனைய தரப்பினரின் ஆட்சேபனைகளை முன் வைக்க, மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று ஜனாதிபதி ரணிலின் விடுபாட்டுரிமை தொடர்பிலான ஆட்சேபனைகளை மன்றில் முன் வைக்கப்படவுள்ளன.

21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.