இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டவர்களும் அதனை பார்வையிட வந்தவர்களும் இந்த கொடிகளையும், மிகவும் பழமையான கலைப்பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தக் கொடிகள் பழங்கால மதிப்பு மிக்கவை என தெரிவித்துள்ளசிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இதன் காரணமாக எதிர்கால சந்ததியினர் இந்த கொடிகளை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன கொடிகள் மற்றும் தொல்பொருட்களைக் கண்டறியும் வகையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதம் மிகப் பெரியது எனவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.