Home செய்திகள் யாழில் பேரூந்து சேவைகள் முற்றாக முடங்கின:

யாழில் பேரூந்து சேவைகள் முற்றாக முடங்கின:

11
0

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் , பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக நீண்டகாலத்திற்கு பின்னர் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் (25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் எரிபொருளை பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.