காலிமுகதிடலில் மக்கள் எழுச்சி போராட்டக்காரர்கள் மீது முப்படையினரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதிக்க நாளைய தினம் (25) திங்கட்கிழமை பாராளுமன்றை கூட்டுமாறு பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷன் கிரியெல்ல கடிதம் மூலம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில்….
காலிமுகத்திடலில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடாத்தப்பட்ட விதம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை பலரும் வன்மையாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அத்தோடு சர்வதேச அமைப்புக்களும், பல நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கை எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை இது இன்னும் மோசமடையச் செய்யும்.
ஆகவே, இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்க நாளைய தினம் பாராளுமன்றை கூட்டுமாறு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அக்க்கிய மக்கள் சக்தி இக் கோரிக்கையை முன்வைக்கிறது. என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.