கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில், பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, பொலிசார் மற்றும் இராணுவம் உட்பட 2,000 பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்குள் நுழைந்து அவர்களது கூடாரங்களை இடித்து அகற்றி, போராட்டக்காரர்களை தாக்கியதாகவும், குறைந்தது 48 பேர் காயமடைந்ததாகவும் அறியமுடிவதாக தெரிவித்துள்ள அவர்
தாக்குதலின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை, அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மட்டுமன்றி, செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதும் தடியடி நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது நான்கு ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர். செய்தியாளர்களின் கூடாரங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் அல்லது தொலைபேசிகளை எடுத்துச் சென்றவர்கள், குறைந்தது இருவர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன அல்லது பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு சட்டத்தரணிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள், எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் வலியுறுத்தினார்.
பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்படவேண்டும். காலிமுகத்திடல் போராட்டக்களம் மீதான தாக்குதலானது, நாட்டின் பிற இடங்கள் உட்பட அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு அச்சம் மிகுந்த செய்தியை அனுப்பியுள்ளது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் அது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் விளைவு குறித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.
அனைத்து இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான கட்டமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு புதிய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தீர்க்க முயற்சி செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.