ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து போராட்டக்காரர்களை ஆயுதம் தாங்கிய படையினர் விரட்டியடித்துள்ளனர்.
இன்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் திடீரென பெருந்திரளான இராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அப் பகுதிக்குள் வேகமாக உள்நுளைந்து போராட்டக்காரர்களை விரட்டியதோடு, அங்கிருந்த கூடாரங்கள், பனர்கள், பதாகைகள் என்பவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் கையடக்க தொலைபேசியை பறித்து அதிலிருந்த படங்கள் மற்றும் காணொளிகளை இராணுவத்தினர் அழித்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருவதோடு தற்போது ஒரு தொகுதி போராட்டக்காரர்கள் படையினரை எதிர்த்து நின்று அங்கு கோஷங்களை எழுப்பி அடக்குமுறைக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் பாரிய போராட்டங்கள் பல முனைகளில் வெடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் (21) ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது அரச விஜயமாக பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் மேற்கொண்டு உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.