நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முதூற செயற்பாட்டாளர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவிற்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்படி நடவடிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கோட்டை பொலிஸாருக்கு அதன் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த நீதிமன்ற உத்தரவை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, 95 நாட்கள் தொடர்ந்த மக்கள் போராட்டத்தால் “Gotta go Home” போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் ஓர் அங்கமாக இருந்து ராஜபக்சேக்களை காப்பாற்ற முயலும் ரணீலுக்கு எதிரான “Ranil go Home” போராட்டம் இன்னும் வெற்றி பெறாத நிலையில் போராட்டக்காரர்களை அகற்ற முயலும் நடவடிக்கையானது மேலும் போராட்டதை தீவிரப்படுத்தும் என்பதோடு பதற்றமான சூழலுக்குள் கொழும்பு நகரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.