கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிக்க கொழும்பை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளால் அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் நிபந்தனைகள் மற்றும் யோசனைகளை அரசியல்வாதிகள் முன்நிலையில் முன்வைக்கும் நிகழ்வு ஒன்று இன்று (12) கொழும்பு தேசிய வாசிகசாலையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், மனோ கணேசன், ஜீவன் தொண்டமான், ராசமாணிக்கம், துமிந்த திஸனாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, உட்பட பல கட்சி அரசியல்வாதிகளும், சிவில் அமைப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதில் போராட்டக்காரர்கள் அடுக்கடுக்காக தமது கோரிக்கைகளையும், யோசனைகளையும் முன்வைத்தனர். அவையாவன்…
- 1. கோட்டபாய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த உடன் பிரதமர் ரணில் உட்பட அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும்.
- 2. கோட்டபாய மற்றும் ரணில் ஆட்சி முடிவிற்கு வந்தவுடன் பொருளாதாரம், சமூக அரசியல் நோக்கங்கங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
- 3. ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும்.
- 4. இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில் மக்கள் கவுன்ஸில் உருவாக்கப்பட வேண்டும்.
- 5. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தை உருவாக்க வேண்டும்.
- 6. கல்வி மற்றும் பொதுப் போக்குவரத்து சேவை உட்பட எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு கண்டு அனைத்தும் வழமைக்கு திரும்பவேண்டும்.
- 7. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் உட்பட சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருப்போருக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
- 8. கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
- 9. நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில் வரிக் கொள்கை மாற்றி அமைக்கப்படவேண்டும்.
- 10. நிறைவேற்று அதிகார முறமை முற்றாக ரத்துச் செய்யப்பட்டு மக்களுக்கு பொறுப்பு கூறாத அரசியல்வாதிகளை மீழழைக்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
- 11. ராஜபக்ஷர்களால் மோசடி செய்யப்பட்ட அரச நிதி அனைத்தும் முறையான விசாரணையுடன் அரசுடமை ஆக்கப்பட்டு, மோசடியாளர்கள் அனைவரும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.
- 12. நுண் கடன் மற்றும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதுடன், லீசிங் மற்றும் சிறு வியாபாரக் கடன்களை மீள் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி மக்கள் கருத்துக்களை கேட்டதன் பின்னர் தலை சுற்றியதாகவும், இப்போது தான் இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் ஒற்றுமையோடும், அரசியல் தெளிவோடும் செயற்பட ஆரம்பித்துள்ளனர் எனவும் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார். நல்ல வேளை ஆட்சி அதிகாரத்திற்கு போட்டி போடும் கட்சித் தலைவர்கள் பலர் வரவில்லை. அவர்களும் வந்திருந்தால் அவர்களின் நிலை என்னவாகியிருக்குமோ என அவர் மேலும் கூறினார்.