
திட்டமிட்டபடி நாட்டை விட்டு தப்பியோட முடியாத நிலையில் உள்ள ராஜபக்ஷக்களின் சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதன் முதல் கட்டமாக மக்கள் கூடியுள்ள இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக தலைமறைவாகியுள்ள கோட்டபாய ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்பில் இருப்பதும் முப்படை அதிகாரிகளை சந்தித்து பலகட்ட முக்கிய கலந்துரையாடல்களை செய்துள்லதாகவும் தெரிகிறது. இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் ராஜபக்ஷேக்களும், தற்போதைய இராணுவத் தலைமைகளும் ஆட்சியை கைவிட்டால் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்பதால் எப்படியேனும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் எனவும் இராணுவ ஆட்சியை கொண்டுவர யோசித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இன்று (12) காலை ஜனாதிபதி மாளிகையினுள் கலவரம் உருவாக்கி அங்கு பெரும் கை கலப்பு ஏற்பட்டு கலவரமக மாறியிருந்தது. இதன்போது ஒரு பெண்ணின் கழுத்தும் கத்தியால் வெட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத்தொடர்ந்து புதிய செட்டி தெருவில் இனந்தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தவிர வீதித் தடைகள் அதிகரிக்கப்பட்டு, பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலும் அதிகமாக குவிக்கப்பட்டும் வருகிறது.
இவை அனைத்தும் மக்களை அச்சுறுத்தி மரண பீதியை அல்லது கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படலாம் எனும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்கும் சம நேரத்தில் மக்களை தமது தேவைகளுக்காகவும், போராட்டம் முடிந்துவிட்டது எனும் மாயையை உருவாக்கியும் மக்கள் கூட்டத்தை கலைக்கவும், மேலும் ஒன்றுகூடுவதை தடுக்கவும் தந்திரமான முறையில் மேலும் சில நகர்வுகள் இடம்பெற்றுவருகிறது.
ஜனாதிபதி தாம் பதவி விலகத் தயார் எனவும் அதற்கான திகதியையும், உறுதிப்படுத்த கடிதம் அனுப்பியதான செய்திகளை சபாநாயகர் ஊடாக வெளியிட்டு கோட்டபாய ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதான நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிகப்படுகிறது. சபாநாயகர் ராஜபக்ஷேக்களின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் எனபதாலும், நேரடியாக காணொளி மூலமோ அல்லது தனது டுவிட்டர் பக்கதிலோ நேரடியாக மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஜனாதிபதி அறிவிக்காமையே இச் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.
சபாநாயகர் ஊடாகவே ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் வெளியாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்த பின்னர் ஜனாதிபதி வெளிநாடு ஒன்றிற்கு சென்றிருப்பதாகவும் பின்னர் தான் தவறாக கூறியதாகவும் முன்னுக்குபின் முரணாக சபாநாயகர் தெரிவித்திருப்பதும் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்துள்ளன.
மேலும் நாட்டில் எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை அதிகளவில் இறக்கி உடனடியாக வினியோகிக்க ஆரம்பித்துள்ளதோடு முக்கியமாக கொழும்பில் 11ஆம் 12ஆம் திகதிகளில் மட்டும் எரிவாயு வினியோகிக்கப்படும் எனவும் அறிவித்து வினியோகங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனால், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை எனபன முற்றாக முடக்கப்பட்டு மக்கள் கையகப்படுத்திவிட்ட நிலையிலும், ஜனாதிபதி தலைமறவாகி உள்ளதோடு பதவி விலகல் அறிவிப்பு வந்துள்ளதாலும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணி மக்கள் தமது தேவைகளை பார்க்க சென்றுவிடுவார்கள். அதன் பின் மீண்டும் கையகப்படுத்தி தமது ஆட்டத்தை ஆரம்பிக்க திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
எது அவ்வாறாகினும் நாளைய தினம் ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்து பொறுப்புக்களை ஒப்படைத்தால் பெரிதாக பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மாறாக தமது சதிதிட்டங்களை நடைமுறைப்படுத்த்தி னாட்டு மக்களை ஏமாற்ற முனைந்தால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வலுப்பெறவும், கலவரங்கள், அசம்பாவிதங்கள் இடம்பெறவும் வாய்ப்புக்கள் அதிகமே உள்ளன.