புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச நாளை மறுதினம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும் புதிய ஜனாதிபதியை நியமிக்க நாடாளுமன்றம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கூடும் எனவும் அறியமுடிகின்றது.
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, அரச தலைவர் பதவிக்கு டலஸ் அழகப்பெருமவின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் நாட்டை சீரழித்த மகிந்த குடும்பத்தினரின் “பொதுஜன பெரமுன” கட்சியிலிருந்து எவரையும் ஜனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ நியமிக்க ஏனைய கட்சியினர் விரும்பவில்லை என்றே அறிய முடிகிறது.