Home செய்திகள் எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்: ராஜித சேனாரத்ன

எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்: ராஜித சேனாரத்ன

62
0

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இணங்க ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ராஜித சேனாரத்ன எம்.பி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே ராஜித சேனாரத்ன எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் செயல்படாத நிலையில் மாற்று பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரே இருக்க வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கிணங்க எதிர்க்கட்சித் தலைவரே மாற்று பிரதமராக நியமிக்கப்படுவார்.

உலகில் எந்த ஒரு நாட்டிலிருந்தும் தலைவர் ஒருவர் நாட்டுக்கு வருகை தரும் போது அவர்கள் பிரதமரை சந்தித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து விட்டுதான் செல்வர்.

நாம் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாம் அனைவரும் இணைந்து அதிகாரங்களை பகிர்ந்து முடிந்தளவு விரைவாக அரசாங்கம் ஒன்றை அமைப்போம். மக்களை துன்பகரமான நிலையில் இருந்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே எமது நோக்கம். இதற்கான முடிவு பாராளுமன்றத்தின் மூலமே பெற்றுக் கொள்ளப்படும். அவ்வாறில்லாமல் நாட்டை அராஜகத்திற்கு உட்படுத்தி ஆப்கனிஸ்தான், சூடான் போன்ற நிலைக்குத் தள்ள இடமளிக்க முடியாது.

பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக அராஜகத்தில் இருந்து நாட்டை மீட்டு நாட்டு மக்களின் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.