ஜனாதிபதி மாளிகை முற்றாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடாத்தப்பட்ட சர்வகட்சி கூட்டத்தில் இலங்கையின் முக்கிய பெரும் கட்சிகளான “ஐக்கிய மக்கள் சக்தி” மற்றும் “தேசிய மக்கள் சக்தி” ஆகிய இரு கட்சிகளும் பங்குகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.
இருப்பினும் குறித்த கூட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி, முஸ்லீம் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகள் பங்குபற்றியுள்ள இக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவருகிறது.
ஆனால், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே மக்கள் எழுச்சி கொண்டு இம் மாபெரும் போராட்டத்தை நடாத்தி கொழும்பை முடக்கி, ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள நிலையில் மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக் குரலுக்கும் மதிப்பளிக்காது பிரதமர் தலைமையிலான குறித்த கூட்டத்தில் பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ளனர்.
இதனால் அடுத்த கட்டமாக பிரதமர் இல்லம் முற்றுகைக்கு உள்ளாகக்கூடும் எனவும், போராட்டம் மேலும் தீவிரமடையவும், அசம்பாவிதங்கள் இடம்பெறவும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.