Home உலக செய்திகள் கடும் எதிர்ப்பால் பதவி விலகிய பிரிட்டன் பிரதமர்!

கடும் எதிர்ப்பால் பதவி விலகிய பிரிட்டன் பிரதமர்!

66
0

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது அமைச்சரவையில் இருந்து 40 அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து, அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதன் காரணமாக பிரித்தானியாவின் பிரதமாராக இருக்கும் வாய்ப்பை இழந்துள்ள பொறிஸ் ஜோன்சன் அவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சி தமது புதிய தலைவரை நியமிக்கும் வரை அதாவது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரையில் (அடுத்த 3 மாதங்களுக்கு) தொடர்ந்தும் பிரிட்டன் பிரதமராக பதவிவகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்கிற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், போரிஸ் ஜான்சன் மன்னிப்புக் கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் உள்ளான நிலையில், அவருக்கு நெருக்கடி முற்றியது.

இதன் காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் நேற்று மாலை பதவி விலகினர்.

போரிஸ் ஜான்சனைக் கண்டித்து அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர்.

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் பதவியையும் அவர் இராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.