தடைசெய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டது போன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் அரசாங்கம் நீக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
டொலர் அதிகமாக வருவதற்காக தடைசெய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தடைகளையும் அரசாங்கம் நீக்க வேண்டும். எமது நாட்டில் முதலீடு செய்ய புலம்பெயர் உறவுகள் தயாராக உள்ளனர். இனவாத ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும்.
மேலும், போக்குவரத்தின்றி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இ.போ.ச. நிரப்பு நிலையங்களில் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாததால் குழப்ப நிலை உருவாகியுள்ளது. இதனை அமைச்சர் தீர்வு காண வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள புலனாய்வு துறைகளையும் முடக்கி விட்டு கியூவிலிருந்து எரிபொருள் பெற்று அதிக விலைக்கு விற்பவர்களை பிடிக்க வேண்டும். எரிபொருள் மாபியாவை நிறுத்த வேண்டும்.
தனியார் நிரப்பு நிலையங்களுக்கு மாதாந்தம் பல எரிபொருள் கொள்கலன்கள் வருகின்றன. ஆனால் கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு ஓரிரு தடவை தான் எரிபொருள் வருகிறது. இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சருக்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை. எரிபொருள் வராதென அமைச்சர் அறிவித்த மறுநாள் எரிபொருள் வருகிறது. இதனால் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது என்றார்.