பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு நகர பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் நேற்று (30-06-2022) காலை பத்து மணிக்கு பெண்கள் பலர் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது எனவும் இவர்களுக்கு வழங்கும் அதிகபட்ச தண்டனையானது இனி இவ்வாறான செயற்பாட்டை வேறு ஒருவர் செய்ய எண்ணாத அளவில் இருக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மாணவிகள் சிலரை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 28 வயதான ஆசிரியருக்கு எதிரான வழக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலையொன்றின் மாணவிகளை மாணவர்களுடன் காதல் வலையில் விழவைத்து, 6 மாணவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண மற்றும் பாலியலில் ஈடுபடும் புகைப்படங்களை எடுத்து, அவற்றை மாணவிகளிடம் காண்பித்து அச்சுறுத்தி, பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆசிரியர் உட்படுத்தியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியருக்கு எதிரான முதல் வழக்கு, விசாரணைக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.