Home செய்திகள் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம்:

கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம்:

91
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே இலங்கையில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், சுட்டிக்காட்டியுள்ளார்..

அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். 

அதன்படி இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நேற்றைய தினம் செய்திருக்கும் டுவிட்டர் பதிவிலேயே ஸ்டீவ் ஹன்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் படிப்படியாக மிகமோசமடைந்துவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது அண்ணளவான மதிப்பீட்டின்படி இலங்கையின் வருடாந்தப் பணவீக்கம் 130.14 சதவீதமாகக் காணப்படுவதாகவும் இது நாட்டின் உத்தியோகபூர்வ வருடாந்தப் பணவீக்கமாகக் காணப்படும் 39.10 சதவீதத்தின் 3 மடங்கை விடவும் உயர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கை ரூபாவின் பெறுமதி 50 சதவீதத்தால் வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே நாட்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், தற்போது இலங்கை அதன் கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடைந்திருப்பதாகவும் இது ஜனாதிபதி பதவி விலகவேண்டிய தருணமென்றும் தெரிவித்துள்ளார்.